என் மனவானில் S.K.R

என்மனவானில்
வரலாறாகி விட்ட வதிரியின் எஸ்,கே.ஆர். என்கின்ற அடையாளம் (Icon) வதிரியின் சமூக அபிவிருத்தியின்அங்கங்களாக விளங்கிய வதிரி தமிழ் மன்றம், வதிரி டைமன் விளையாட்டுக் கழகம், வட்டுவத்தை சனசமூக நிலையம், வதிரி பலநோக்குக் கூட்டுச்சங்கம் ஆகியவற்றில் மிக நீண்ட காலங்கள் பல்வேறு பதவிகளை வகித்து வதிரியின் அடையாளமாக திகழ்ந்த கணபதி இராஜேந்திரன் அவர்கள் 01-10-2022ம் திகதி இயற்கை எய்தினார் என்ற செய்தியால் எமது ஊரை நேசிக்கின்ற எவராலும் கவலை அடையாமல் இருந்திருக்க முடியாது. அந்தளவிற்கு அவரின் செயற்பாடுகள், வழிகாட்டல்கள் பலரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. வதிரியின், நூற்hண்டு கால வரலாற்றை நோக்குமிடத்து பெரும்பாலானோர்கள் சித்தவைத்தியர்களாவும், சோதிடர்களாகவும், வர்த்தகர்களாகவும், கலைஞர்களாகவும், ஆசிரியர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் இருந்த காரணத்தினால் புத்திஜீவிகளாகவே காணப்பட்டனர். இதனால் இந்தியாவிலும், சிறப்பாக தமிழ் நாட்டிலும் ஏற்பட்ட தாக்கங்கள் எமது ஊரையும் பாதித்தது. அதன் காரணமாக இரண்டு முக்கிய கோட்பாடுகள் அல்லது கொள்கைகள் எமது ஊரில் பரவத்தொடங்கி. ஒருபக்கம் காந்தீயமும், மறுபக்கமும் பகுத்தறிவுவாதமும் தொடங்கி இரு பெரும் பிரிவுகளாக இயங்கினர். சைவப்பெரியார் கா.சூரன், பெரியவர். க.மூ.சின்னத்தம்பி, சைவப்புலவர் வல்லிபுரம், ஆசிரியர் சமூக ஜோதி.ஆ.ம.செல்லத்துரை போன்றோர் காந்தீய வழியில் கல்விக்கும், சமயத்திற்கும் தொண்டு செய்ய, வைத்தியர் கோவிந்தசாமி, மு. மயில்வாகனம், மு. கந்தவனம் போன்றோர் பகுத்தறிவுக் கொள்கையில் நம்பிக்கை வைத்து, சமூகத்திற்கான முக்கிய பணியாக தமிழ் மன்றம், டைமண் விளையாட்டுக் கழகம் என்பற்றை ஆரம்பித்தனர். அப்போது இந்தப் பிரிவினரின் கை ஓங்கியபடியால். தி.மு.கவின் சிகப்பு, கறுப்பு நிறங்கள் எமது கழகத்தின் நிறங்களாக வடிவமைக்கப்பட்டு தனித்தன்மை வாய்ந்து இன்றுவரை காணப்படுகின்றது. ஆனால் இந்த இருபிரினருக்கும் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்ததே தவிர பொது விடயங்களில் ஒன்றாகவே இணைந்து பயணித்தனர். எந்தக் காரணத்திற்காகவும் முட்டி மோதவில்லை. இதற்கு காரணம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இரத்தச் சொந்தகளாகவே இருந்தனர். இதனை எமது எதிர்காலச் சந்ததியினர் புரிந்து கொள்ளவேண்டும். தி,மு.க.வை ஆதரித்தவர்கள் மத்தியில் இடதுசாரிக் கொள்கைகள் இலகுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கின. சமசமாஜக்கட்சியில் 1940 களில் ஜெயம் என்று வடமராட்சி மக்களால் சிறப்பாக ஒடுக்கப்பட்ட மக்களால் அழைக்கப்பட்ட தர்மகுலசிங்கம் பெரும்மாற்றைத்தை ஏற்படுத்தினார். அதேபோன்று கம்யூனிஸ்ற் கட்சிக்கு பொன்.கந்தையா (முன்னால் பாராளமன்ற உறுப்பினர் ) தலைமை தாங்கினார். ஏறக்குறைய 80 வீதமான எமது மக்கள் இடது சாரிகளையே ஆதரித்தனர். அப்போது மாணவனாக பல கசப்பான அனுபங்களைச் சந்தித்த எஸ்.கே. ஆர். அவர்கள் இடதுசாரிக்கொள்கைப் பக்கம் சாய்ந்ததில் வியப்பேதும் இல்லை. எனது சிறுபிராயத்தில் எமது ஊரின் பெரும்பாலான வீடுகளில் இந்தியத் தலைவர்களான காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்களும், தி.மு.க. தலைவர்களான பெரியார், அண்ணா, கருணா நிதி, நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரின் படங்களே தொங்க விடப்பட்டிருந்தன. கல்வி அமரர் சி.க. இராஜேந்திரன் அவர்கள் திரு. திருமதி. கணபதி, கதிராசி தம்பதிகளுக்கு மகனாக 16-12-1935ம் ஆண்டு பிறந்தார். 3ம் வகுப்பு வரை தனது ஆரம்பக் கல்வியை தேவரையாளி இந்துக் கல்லூரியில் பயின்றார். பின்னர், கரவெட்டி, விக்கினேஸ்வரக் கலலூரியில் சிலகாலம் பயின்றார். அங்கு இடம் பெற்ற ஜாதிரீதியான பாகுபாடுகள் அவரை வெகுவாகப் பாதித்தன. மேட்டுக்குடியினரின், பிள்ளைகளுக்கு, வேறு மைதானமும், வேறு பந்தும், பிரத்தியேக ஆசனங்களும் ஒதுக்கப் பட்டன. தாகத்திற்கு கூட தண்ணீர் குடிக்க தொலைவில் உள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. மன உளைச்சல் காரணமாக அவரால் தொடர்ந்து அங்கு படிக்க முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில், கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிப்பது பெருமையாகக் கொள்ளப்பட்ட காலமது. ஆகவே எமது ஊரில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் குறிப்பாக கடை முதலாளிகளின் பிள்ளைகள் சென்பற்றிக்ஸ் கல்லூரியை நோக்கி படையெடுத்தனர். அவர்களில் அமரர்களான ஏ.கந்தசாமி, கே.பத்மநாதன், ரீ.இரத்தினசிங்கம், பீ.சக்திவேல், கே.சிவப்பிரகாசம் ஆகியேர் மற்றும் பீ.செந்திவேலும் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் தாக்கம் எஸ்.கே.ஆரின் தந்தையையும் பாதித்தது. எப்படியாவது தனது மகனை ஏனையோருக்குச் சமனாக படிப்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் மகனை மிகவும் சிரமப் பட்டுச் சேர்த்தார். எந்த ஜாதி வெறி முன்னர் இருந்த பாடசாலையை விட்டுத் துரத்தக் காரணமாக இருந்ததோ. அதற்கு இணையான வர்க்க வேறுபாடு காரணமாக கிறீஸ்தவ கல்லூரியான இங்கும் ஒதுக்கப்பட்டார். பொருளாதாரம் காரணமாக3ம் நிலை வகுப்பு மாணவனாகவே அவர் கணிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கிறீஸ்தவ சமயத்திலும் ஜாதி பாகுபாடு காரணமாக வேறு, வேறான தேவாலயங்கள், மயானங்கள் என்பன நடைமுறையில் இருந்தன. கல்விச் செலவுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் அவற்றைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து திரும்பவும் ஊருக்கு வந்தார். பின்னர், நெல்லியடி மத்திய கல்லூரியில் அனுமதி பெற்று, விடுதியில் தங்கிப் பயின்றார். ஆனால் இந்தக் கல்லூரிகள் இரத்தினசிங்கம், கந்தசாமி போன்றோரின் விளையாட்டுத்திறமைகள் காரணமாக அவர்களை முன்னிலைப் படுத்தினர். அதன்காரணமாக டைமண் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பிரபல கல்லூரிகளான சென்ஜோன்ஸ், யாழ்.ஹின்டு, யாழ்.மத்தியகல்லூரி, ஸ்கந்தவரோதயா, மஹாஜனா, ஹாட்லி, விக்கினேஸ்வரா, நெல்லியடி மத்தி, சேக்கிறட்ஹாட் போன்ற கல்லூரிகளில் இலகுவாக இடம் கிடைத்தன. சில கல்லூரிகளில் இடதுசாரித் தலைவர்களின் முயற்சியாலும் பாடசாலைக்கான அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. யாழ்.மத்திய கல்லூரியின் பிரவேசம் அவரின் அறிவுப் பசிக்கும், தேடலுக்கும் வழி வகுத்தது எனலாம். ஆரம்பத்தில் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தாலும், வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் அவரை சமூக மாற்றத்திற்கான திசையை நோக்கி நகர வைத்தது. அங்கு ‘மத்திய தீபம்’ என்ற மாதாந்தச் சஞ்சிகை மலர்க்குழுவில் செயலாளராக இருந்து பணியாற்றினார். அவரது வீட்டில் அந்தப் படம் தொங்க விட்டிருந்ததை கண்டிருக்கின்றேன். அப்போது இருந்த பிரபல எழுத்தாளர்களை கல்லூரியின் பிறிதொரு சஞ்சிகையான ‘தேனீ’ யில் எழுத வைத்தார்கள். எஸ்.கே. ஆருக்கு இங்கு நல்ல ஆசான்கள் வழிகாட்டியாகவும் நட்பாகவும் கிடைத்ததினால் தன்னை அந்தத் துறையில் வளம் படுத்திக் கொண்டார். அவர் தனது கல்வியை தொழில் காரணமாக லண்டன் அட்வான்ஸ் வெவெல் வகுப்புடன் நிறுத்திக் கொண்டார்.
அரசியல்: ஆரம்பத்தில் தி.மு.க.வின் பகுத்தறிவுக் கொள்கையில் மிகுந்த நாட்டங் கொண்டிருந்தார். அவர்களின் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்துத் தள்ளினார். அமரரின் வீட்டில் தி.மு. தலைவர்களின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன அதன் காரணமாக தனது வீட்டிற்கும் ‘அறிவகம்’ என்ற பெயரை வைத்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆப்பிரஹாம் லிங்கன் தான் ஒரு செருப்புத் தொழிலாளியின் மகன் என்பதனைப் பெருமையுடன் சொன்னாரோ. அதேபோன்று அமரரும் தான் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன் என்பதில் பெருமை கொண்டார். தனது கல்விக்காக தந்தையார் பட்ட துன்பங்களை என்னுடன் பகிர்ந்துளார். யாழ். மத்திய கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் மாலை நேரங்களில் பத்திரிகைகள் வாசிப்பதற்காக, அடிக்கடி யாழ்.நகரில் உள்ள கம்யூனிஸ்ற் கட்சியின் பிரதேசக் காரியாலயத்திற்கு சென்று வந்தவர், தோழர்களான கார்த்திகேயன், வைத்திலிங்கம், பொன்.கந்தையா, வீ. பொன்னம்பலம் போன்ற இடதுசாரி ஆளுமைகளின் பழக்கத்தினால் படிப்படியாக புதிய சித்தாந்தம் நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இடது சாரிகளின் தொடர்பு காரணமாக பாடசாலை நிர்வாகத்தால் அவருக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டன. என்னிடம் அத்துடன் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஜீவானந்தம் போன்ற இடது சாரித் தோழர்கள் அடிக்கடி வந்து போனதால் அவரின் அரசியல் ஆர்வம் அதிகரித்ததனால் தன்னை கம்யூனிஸ்ற் கட்சியின் அங்கத்தவராக இணைத்துக் கொண்டார். வதிரியில் இலங்கை சமசமாஜக் கட்சியின் அரசியல் கூட்டம் நடாத்தும் இடமாக ஆ.கதிரேசன் வீடும் (புளியடி) இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சியின் அரசியல் கூட்டம் நடாத்தும் இடமாக சதாசிவம் அவர்களி வீடான பூமகள் வாசமும் திகழ்ந்தன. எங்கள் மாணவப் பருவத்திலேயே தென்னிலங்கை இடது சாரி கட்சித் தலைவர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமரர் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தினால், அவரின் முயற்சியால். இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சியின் 26 வது மகாநாடு வதிரி, சிவியான் மைதானத்தில் மிகப் பிரமாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது, தோழர் பீற்றர் கெனமன், சரத்முத்தெட்டுகம, திஸ்ஸ விஜயரத்னா, வீ.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 1972ல் முதன் முறையாக கட்டைவேலி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் இடதுசாரிகளின் வசம் வந்து பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்தனர். சிதம்பரப்பிள்ளை ஆசிரியர் தலைமையில் இருந்த நிர்வாகக் குழுவில் ஆசிரியர் சதானந்தன், சி.கே.ஆர். அவர்களும் இணைந்து செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது, அதன் பின்னரே இராஜகிராமம், அல்வாய், வதிரி ஆகிய கிராமங்களில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது, எமது பிள்ளைகள் வேறுகல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்புக்களை தனது செல்வாக்கைக் கொண்டு செய்திருக்கிறார். இதே காரணங்களுக்காக நானும் அவருடன் சென்றிருக்கின்றேன். கடைசிவரை கம்யூனிஸ்ற் கடசியின் அங்கத்தவராகவே இருந்தது மட்டுமன்றி, கொள்கையையும் கடைப்பிடித்தார். ‘மக்கள் சேவையே மகேசன்” பணி என்பதனை முற்றாக நம்பினார். சமூகப் பணி. 1961ல் தேவரையாளி இந்துக்கல்லூரியின் பிதாமகன் எனச் சொல்லக்கூடிய அதிபர் எம்.எஸ்.சீனித்தம்பி அதிபர் தன்னை யாழ்.மத்திய கல்லூரிக்கு வந்து மச்சான் என்று உரிமையுடன் அழைத்து கொண்டு கல்லூரியில் கிளாக்காக பணியில் அமர்த்தியதாக பெருமிதத்துடன் என்னிடம் கூறினார். அவரின் சமூகப் பணியும், கல்லூரியின் எழுதுவிளைஞர் பணியும், குடும்பப் பிரவேசமும் சமகாலத்திலேயே நிகழ்ந்தது. 1962ல் தனது உறவினரை திருமணம் செய்து கொண்டார். 1962ம் ஆண்டு சீ. கமலநாதன் தவைமையில் நடைபெற்ற வதிரி, தமிழ் மன்ற வருடாந்தக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஆ.இரத்தினசபாபதி தலைவராகவும், செயலாளராக சி.க. இராஜேந்திரனனும் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்வு அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைகளுக்கு காரணமாக அமைந்தது எனலாம். பதவி ஏற்ற குறுகிய காலத்தில் மன்றக் கட்டிடங்கள் சீராக்கப்பட்டதுடன். தனித்தனியாக இயங்கிய வட்டுவத்தை சனசமூக நிலையம், டைமண் விளையாட்டுக் கழகம் என்பனவற்றை ஒன்றாக்கப்பட்டு தமிழ் மன்றத்pன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். 2011 வரை தமிழ் மன்றத்தின் நிர்வாகத்தில் ஏதோ ஒரு பதவியில் தொடர்ந்து இவரை அங்கத்தவர்கள் தெரிவு செய்து கொண்டிருந்தமை அவர் மீது வைத்த நம்பிக்கையை காட்டுகின்றது. வதிரி தமிழ் மன்றத்தின் அரை நூற்றாண்டு வரலாறு செயல் வீரர் இராஜேந்திரனின் வரலாறு என்று சொன்னால் மிகையாகாது. அந்தளவிற்கு அவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. 1969ல் அமரர் நைல்ஸ் ஆசிரியரின் வீட்டில் இயங்கிய பாலர் பாடசாலை தமிழ் மன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்கின்றது. ‘போயா விருந்து’ என்ற பெயரில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் இலக்கிய சொற்பொழிவுகள், கவியரங்குகள், நாடகங்கள், புத்தக வெளியீடுகள் என்பன இடம்பெற்றன. மன்றம் என்ற மாதாந்த சஞ்சிகை ராஜஸ்ரீகாந்தன், மு.பாக்கியநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு றோணியோ அச்சில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில பிரதிகள் பின்னர் தமிழ் நாட்டு சஞ்சிகைகளுக்கு ஈடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர்களைப் பாராட்டும் நிகழ்வும் இவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சமகாலத்தில் கல்லூரி அதிபர் சீனித்தம்பியின் நிர்வாக சீர் திருத்தங்களுக்கு உறுதுணையாக பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சிக்கும் சேவையாற்றினார். இவரின் பதவிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு பருத்தித்துறைத் தொகுதியில் முதன்மை “Pசழவநஉவ உழஅஅரnவைல pழதநஉவ உநவெசந” ஆக அரசாங்க திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டதாகும். எமது ஊரின் ஏனைய அமைப்புக்களுக்கு மேலதிகமாக வதிரி, தமிழ் மன்ற கிராம அபிபிருத்திச் சங்கம், வதிரி, தமிழ் மன்ற மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன அமைக்கப் பட்டன. தேசிய இளைஞர் சேவை மன்றம், சர்வோதயம் போன்ற அமைப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு சில வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. யாழ்.உதைபந்தாட்டச் சங்கத்தின் உதவிச்செயலாளராக 1968-1970 வரை கடமையாற்றினார். யாழ். மாவட்ட ரீதியில் 19 வயதுக்குட்பட்டோர் கலந்து கொண்ட சுற்றுப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. முதன் முறையாக யாழ்.மாவட்டத்தில் 11 வீரர்களும் பூட்ஸ் அணிந்து விளையாடிய வரலாற்றுப் பெருமை இவர் காலத்திலேயே நிகழ்ந்தது, யாழ். மாவட்டத்தில் உள்ள 10 வலிமை வாய்ந்த கழகங்களுடன் கட்டைப்புளியடி மைதானத்தில் சிநேக பூர்வமான போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற முதற் தர கழகமாக அப்போது விளங்கியது எனலாம். முதன் முறையாக வெளிமாவட்டங்களுக்குச் சென்று விளையாடியதும் இவரின் நிர்வாகத்தில் தான். திருகோணமலையில் பிரபலம் வாய்ந்த 2 அணிகளுடன் மோதி வெற்றி பெற்றதும், அந்த போட்டிக்காக என்னை பதுளையில் இருந்து வரவழைத்து விளையாடச் செய்ததும் மறக்க முடியாத நினைவலைகள். வருடந்தோறும் நடைபெறும் கிராமத்துக்கூடாக ஓடும் மரதன் ஓட்டம் என்பனவும் இவர் காலத்தில் அறிமுகமானவையே.. இவர் காலத்தில் பல விதமான கரப்பந்தாட்டப் போட்டிகள், காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. தி.வரதராஜன் விளையாட்டு முகாமைத்துவ பயிற்சிக்காக மலேசியா சென்றார். சிறப்பாக பல மாகாண, மாவட்ட காற்பந்தாட்டப் போட்டிகளில் பலதடகள் சாம்பியனாக வெற்றிவாகை சூடியது அமரரின் நிர்வாகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது, எமது ஊரின் சிறந்த ஆளுமைகளான வ.இராஜேஸ்வரன், ராஜஸ்ரீகாந்தன் மற்றும் தி. வரதராஜன், சி.குமாரராஜன் ஆகியோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரின் தனிச் சிறப்பு என்னவென்றால் மற்றவர்களை சுதந்திரமாக செயற்பட விட்டாரே ஒழிய தனது கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவில்லை. பகுத்தறிவுவாதியாக, மாக்;ஸீய கோட்பாட்டைக் கடைப்பிடித்த போதும் எமது ஊரின் நன்மை கருதி, பூவற்கரை ஆலயத்தில் செயலாளராகவும், நிர்வாக அங்கத்தவராகவும் பதவி வகித்துள்ளார். அவரின் வதிரி, பல நோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குநர் சபை அவர் பதவி வகித்த காலத்திலிருந்து 2011 வரை ஒரு முறை மட்டுமே போட்டிமுறையில் தெரிவு செய்யப்பட்டது. மற்றும்படி ஏகமனதாகவே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான் அறிந்த வரை இன்று வரை தேர்தல் இல்லாமல் ஒற்றுமையாகவே நடக்கின்றது என நினைக்கின்றேன். அதற்கு வழி கோலியவர் அமரர் அவர்களே. சில காலம் ஒரே கல்லூரியில் பயணித்த ஒரே கோட்பாட்டைக் கொண்ட தெணியான், சதானந்தன் ஆசிரியர்களுடன் சேர்ந்து அயற் கிராமங்களில் உள்ள ஆலயங்களில் சமத்துவ உரிமைக்கான போராட்டங்களை பொது மக்களுடன் இணைந்து நடாத்தினார். கோவில் என்பது அன்பையும், அறத்தையும் போதிப்பதுடன் மக்களின் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். ஜாதிய வன்முறைக்கு எதிராகவும் செயற்பட்டார். கட்சி ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களான சில்லையூர் செல்வராஜன், முருகையன், சுப.இளங்கீரன், டொமினிக்ஜீவா, கே.டானியல், கே.தங்கவடிவேல் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கலை இலக்கிய தாகம் கொண்ட காரணத்தினாலும், நாடகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, யாழ். மத்திய கல்லூரியில் கல்வி கற்ற போது தானே சமூக, சீர்திருத்த நாடகங்களை எழுதி ஊரில் அரங்கேற்றினார். அவருக்கு சிறந்த பேச்சு வன்மையும் இருந்த காரணத்தினால், முக்கிய பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். முதன், முதலில் சமூக நாடகத்தை வதிரியில் அரங்கேற்றிய பெருமை அவரையே சாரும். எஸ்.கே.ஆர். என்ற அடையாளம் தேவரையாளி இந்துக் கல்லூரியில் எழுதுவிளைஞராகப் பதவி வகிக்கத் தொடங்கியதும், சிறுவர் முதல் பெரியோர்களின் நாவில் கிளாக்கையா என்ற பெயராக ஒலிக்கத் தொடங்கியது, எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே பொதுவுடமைவாதிகளாக இருந்தவர்களுக்கு மத்தியில் செயலிலும் மாக்ஸீயக் கோட்பாட்டை இறுதி மூச்சு வரை கடைப்பிடித்தார். எனது நண்பர் வட.அல்வாயூர் தர்மகுலசிங்கம் அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்தின் முன் “வதிரியில் கடைசிவரை கொள்கையுடன் வாழுகின்ற எனக்குப் பிடித்த மனிதர் எஸ்.கே.ஆர்” எனப் புகழாரம் சூட்டினார். 2018ம் ஆண்டு சிவகாமி பவுண்டேசனால் நடாத்தப்பட்ட விருது விழாவில் சி.க.இராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, அவர் கல்லூரி, மற்றும் வதிரி, தமிழ் மன்ற நிர்வாகங்களை திறம்பட நடாத்துவதற்கு அவரின் மனைவி மிகவும் ஒத்தாசையாக இருந்த படியால் அவரின் குடும்பம் சிறப்பாக இயங்கி வந்தது எனலாம். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று சிறந்த குடும்ப வாழ்க்கை வாழ்ந்த திருப்தியுடனும், சமூகத்திற்கு மிகப் பெரிய பணியாற்றிய மகிழ்ச்சியுடனும் இயற்கை எய்தினார். அ;வரை சென்று வாருங்கள் என்று மலர்ச்சியுடன் விடைகொடுப்போம். முக்கிய குறிப்பு: எனது நேர்காணல் மூலமும், நேரடி அனுபங்கள் மூலமும், தம்பி இராஜேஸ்கண்ணனின் நேர் காணலில் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன. நன்றி.