எஸ்.கே.ஆர்


           




          எஸ்.கே.ஆர்.என நன்கு அறியப்பட்ட சி.க.இராசேந்திரன் ஒருதன்னலம் கருதாத சமூகசேவையாளன்.பள்ளிப் பருவத்தினிலிருந்தே மாக்ஸிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஒளியில் நின்று சமூக சேவைகளை ஆற்றிவந்தவர்.கிராம சமுதாய அபிவிருத்திப் பணிகள்,கல்வி,கலை இலக்கியம்,விளையாட்டு முதலிய துறைகளின்வழி தன்னை நன்கு அடையாளப்படுத்தியவர்.குறிப்பாக வதிரிக் கிராமத்தின் படிமலர்ச்சியிலும் வரலாற்று தடத்திலும் எஸ்.கே.ஆரின் காலத்தை எடுத்துவிட்டால் ஒரு நீண்ட வெற்றிடம் தென்படுமளவிக்கு ஆளமாக தடம்பதித்தவர்.தன் காலத்தில் தொடர்ச்சியாக சமூக அக்கறை கொண்ட ஓர் இளைஞர் அணியை சமூகத் தலைவர்களாக உருவாக்குவதற்கு உழைத்தவர். பூர்சுவா மனோபாவங்களைத் தம் தலைமைத்துவ இயல்பாகத் தங்கியவர்களின் மத்தியில் “ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கும்” சமத்துவச் சிந்தனையுள்ள தலைவர். கடந்த ஐம்பது ஆண்டுகால வதிரிக் கிராமத்தின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகமான எஸ்.கே.ஆரின் வாழ்வனுபவத்தின் தொகுப்பாக இந்த நேர்கானல் அமைகின்றன. ஒரு தனிமனிதனது வாழ்க்கைத் தடம் எப்படி ஒரு சமுதாயத்தின் வரலாற்றை பிரதிபலித்திருக்கும் என்பதை இந்த நேர்காணல் புலப்படுத்தத தவறாது என நம்புகிறேன்.
                                                                           நேர்காணல்:-இரா.இராஜேஸ்கண்ணன்.


இரா:-நீங்கள் கிராமிய சமூதாயப் பணிகளிலும் ஏனைய கல்வி,கலை-இலக்கியம்,விளையாட்டுத்துறை சார்ந்த பணிகளிலும் ஈடுபடுவதற்கு பின்புலமாக அமைந்த காரணிகள் எவை? குறிப்பிட முடியுமா?

எஸ்.கே.ஆர்:-இந்த வினாவிற்கான பதிலின் விஸ்தீரணம் மிகப்பெரியது. எனது பாடசாலைக் காலம், நான் அரச உத்தியோகத்தில் பணிபுரிந்த காலம், எனக்கு கிடைத்த தோழமைகள், நான் நேசிக்கும் சித்தாந்தம் இவை யாவும் தான் என்னை சமூகசேவை நாட்டம் கொண்டவனாக ஆக்கியிருந்த காரணிகள். இந்த காரணிகள் ஒவ்வொன்றும் தந்த வாழ்வனுபவங்கள் மிகவும் சிறப்பானவை. அந்த அனுபவங்கள்தான் ஒரு கிராமிய சமுதாயத்தை வழிநடத்துவதற்கு அதாவது கிராமிய மனிதர்களை சகபயணிகளைக் கொண்டு சேவை செய்வதற்கு வழிகாட்டின.

இரா:-நிச்சயமாக நீங்கள் சொன்ன “பதிலின் விஸ்தீரணம்” ஆழமாக அறியபட வேண்டியது. அந்த விஸ்தீரணமான அனுபவங்கள் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டலைத் தரும். எனவே தங்களது பள்ளைக் காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எஸ்.கே.ஆர்:-எங்கள் பாடசாலை என்றால் அது தேவரையாளி இந்துக் கல்லூரி தான். வேறில்லை. ஆனால் நான் தேவரையாளி இந்துக் கல்லூரியில் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தேன். தேவரையாளி இந்துக் கல்லூரி எமது பாடசாலையாக அமைந்த போதிலும் அந்த நாட்களில் எமது பெற்றோர்கள் பலரிடம் ஒரு எண்ணம் இருந்தது. அதாவது தங்கள் பிள்ளைகளை முன்னனிப் பாடசாலைகளிற்கு கற்பித்து முன்னேற்ற வேண்டும் என்று. இதனால் தேவரையாளி இந்துக் கல்லூரி வளர்ச்சி நிலையில் இருக்கும் போதுகூட சென் பற்றிக்ஸ், சென் ஜோன்ஸ், மஹாஜன கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, யூனியன் கல்லூரி போன்றவற்றிற்குத் தமது பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இதனை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று சமுதாயத்தில் வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளுக்கு பெரிய பெரிய பிரபலப் பாடசாலைகளில் கல்வியை வாங்கிக் கொடுத்தனர். இன்னொன்று, அந்தப் பிரபலமான பாடசாலைகளில் கற்பித்த முன்னணியான முற்போக்கான ஆசிரிய ஆளுமைகளின் மீதான விசுவாசமும் நட்பும் காரணமாக அவர்களிடம் தங்கள் பிள்ளைகள் கற்க வழி செய்தனர். வசதிகள் குறைந்த ஒரு குடும்பச் சூழலிலிருந்த எனக்கும் அவ் வாய்ப்பு கிட்டியிருந்தது.

       மூன்றாம் வகுப்புடன் தேவரையாளி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேறி கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரிக்குச் சென்றேன். ஒருவருடம் தான் அங்கு கல்விகற்க முடிந்தது.பாடசாலையில் நிலவிய பாரபட்சங்கள் என்னை அங்கு தொடர்ந்து கற்க ஊக்கப் படுத்தவில்லை. சமூக ஒடுக்குமுறையின் அக்கால நிலையால் எனது மனம் பாதிக்கப்பட்டது. கைமண்டையில் நீர் குடித்தேன், கல்வி கற்பவர்களில் சிலருக்கு தனி மேசை, தனி வாங்குகள், இரண்டு வெவ்வேறு விளையாட்டு மைதானங்கள், விளையாட்டுக்காக தரப்பட்ட பந்துகளில் நிற பேதங்கள் பச்சையும்,சிவப்பும். தண்ணீர் குடிப்பதற்காக “கலட்டி” என்ற நம் சமூககத்தவரின் வாழ்விடத்திற்கு நடந்து சென்றிருக்கிறேன். இந்தப் பள்ளிப் பருவத்து அனுபவங்கள் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் குறித்த வினாக்களையும் விடைகளையும் சிறுவயதிலிருந்தே ஏற்படுத்தின. எமது சமுதாயம் பற்றிய சிந்தனையும், தேவரையாளி இந்துக் கல்லூரியின் தேவை பற்றிய உணர்வுகளும் கிளர்த்தப் பட்டன.
                  இருப்பினும் மோகம் தணியவில்லை.யாழ்ப்பானம் புனித பத்திரிசியர் (சென் பற்றிக்ஸ்) கல்லூரியில் அனுமதி பெற்று, விடுதியில் தங்கியிருந்து கற்பதற்கு வழிசமைக்கப்பட்டது. “விடுதிக் கல்லூரிகள்” அக்காலத்தில் பெற்றோரின் முதன்மைக் கனவுகளில் ஒன்று. மாணவர்களின் ஒழுகலாற்றிற்கு அந்தக் கல்விதான் அடிப்படையென்ற அசைக்கமுடியாத நம்பிக்கை. அதில் உண்மையும் இருந்தது. விக்னேஸ்வராக் கல்லூரியில் சாதி அடிப்படையான பாரபட்சம் என்றால் பற்றிக்ஸ் கல்லூரியில்  வர்க்க அடிப்படையில் அது.பெற்றோரின் சமூக அந்தஸ்து மாணவர்களை FIRST CLASS,SECOND CLASS,THIRD CLASS என்று பிரித்திருந்தது. நான் தச்சு தொழிலாளியின் மகன் பாண், சோறு உண்ணும் மூன்றாம் தரத்துக்குரிய மாணவனாகத்தான் இருக்க முடிந்தது. இரண்டு வருடத்திற்கு மேலாக இந்நிலை தொடர்ந்ததால் HOSTEL கட்டணத்தைவிட HOSPITAL கட்டணம்தான் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் கிராமத்து சூழலுக்கு, கிராமச் சூழலில் ஒரு விடுதிப் பாடசாலை எனது குடும்ப நிலைக்கு ஏற்றவகையில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம். விடுதிக்காகவே அந்தப் பாடசாலை தெரிவு செய்யப்பட்டது. என் மகன் என்ன படித்தான் என்பதனைவிட “என் மகன் விடுதிப் பாடசாலையில்” படித்தான் என்பது அக்கால பெருமையாக இருந்தது. இன்று தலைகீழானது. அங்கும் சொற்ப காலம் தான்.
                        
                     எனது வாழ்வில் மிக முக்கியமான மாற்றங்களுக்கான அடிப்படைகளைத் தந்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக் காலம் தான். இலக்கியம், சமூகப் பணி, அரசியல் முதலியவற்றிலான ஈடுபாட்டை விசையுடன் உந்திவிட்டது யாழ் மத்திய கல்லூரிதான்.

இரா:-உங்களுடைய ஆளுமை உருவாக்கத்தில் மத்திய கல்லூரியின் இடம் குறித்து நீங்கள் பலதடவை விதந்துரைத்ததை கேட்டிருக்கிறோம். அப்படி என்ன மாற்றங்களைத் தந்தது யாழ் மத்திய கல்லூரி? கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்.
                  
எஸ்.கே.ஆர்:-
ஒரு மாணவனுக்கு அவனது பாடசாலைக் காலத்து சந்தர்ப்பங்கள்  - வாய்ப்புக்கள் மிக முக்கியமானவை என்பதை எனது மத்திய கல்லூரிக்கான அனுபவங்களால் உணர்கிறேன். “மத்திய தீபம் “ என்ற மாதாந்த சஞ்சிகை அப்போது இளம் எழுத்தாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டு வந்தது. இந்த சங்கத்தின் செயலாலர் நான். அதன் தலைவர் பின்னாளில் A.S.P யாக இருந்த பொ.சி.தவலிங்கம், அதன் பொருளாளர் பின்னாளில் சட்டத்தரணியாக இருந்த கா.கணபதிப்பிள்ளை. அந்த நேரத்தில் “தேனீ “ என்ற பெயரில் ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தோம். அந்த தொகுப்பில் வித்வான் வேந்தனார், ரசிகமணி செந்திநாதன், வ.அ.இராசரத்தினம், வரதர், யாழ்ப்பாணக் கவிராயர், தான் தோன்றிக்கவிராயர் எனப் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதியிருந்தனர். அவர்களோடு பேசப் பழகக் கிடைத்தது. இலக்கிய ஆர்வம், இரசனை  தொடர்புகள் விரிந்து நண்பர்கள் அதிகரித்தார்கள். காத்திரமான நண்பர்கள் கிடைத்தார்கள்.
       
                      எம்மை வழி நடத்தியவர்களில் மத பண்பாட்டுக் காவலராக விளங்கிய கலைப்புலவர் க.நவரத்தினம் மற்றும் உப அதிபர் A.E.தம்பர் ஆகியோர் முதன்மையானவர்கள். மத்திய கல்லூரி மாணவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் அவர்கள் பெருந்தாக்கம் செலுத்தியவர்கள்.இவர்கள் காலத்தில் என்னுடன் M.N.அயூப், மு.மோதிலால் நேரு, A.இரத்தினவடிவேல், இளைய பத்மநாதன், பசுபதியின் தம்பி, S.K.செல்வரட்ணம் போன்ற நண்பர்களும் அவர்களின் வழிப்படுத்தலைப் பெற்றவர்கள். வல்வெட்டி S.மகாலிங்கம் ஆசிரியர், கரவெட்டி ஜெனகன் ஆசிரியர், விடுதி மேற்பார்வையாளராக இருந்த கரவெட்டி V.K. நடராசா போன்றவர்களின் வழிகாட்டுதல்கள் எம் போன்ற மாணவர்களின் கலை, இலக்கிய சமூக நாட்டங்களை அதிகரிக்கச் செய்தன.  

இரா:-இந்த இடத்தில் உங்களது இடதுசாரிய அரசியல் ஈடுபாட்டுக்கும் யாழ்/ மத்திய கல்லூரி மாணவப் பருவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா?..... அப்படியாயின்....

எஸ்.கே.ஆர்:-இன்றைக்கு ஏதோ மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று போதிக்கின்றனர். அப்படியாயின் எதிர்காலத்தில் அரசியலை தலமை ஏற்று நடத்தப் போறவர்கள் எங்கிருந்து வரப்போகிறார்அகள்?.. தெரியவில்லை. ஆனால் அன்று இடதுசார்கள் நுளைய முடியாதிருந்த மத்திய கல்லூரிச் சூழலை மாற்றியமைத்து மாணவர் மன்றங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் எழுத்தாலர்களை எம்மால் அழைக்க முடிந்தது. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் A.ராஜதுரை பாரதி பற்றிப் பேச அழைக்கப்பட்டார். V.பொன்னம்பலம், ஜீவா, இளங்கீரன், P.கந்தையா போன்ற இடதுசாரிகளின் கருத்துக்கள் சுவறவிடப்பட்டன். இத்தகையவர்களின் பிரசன்னம் என்னைப் போன்றவர்களின் சிந்தனை வீச்சுக்களை மாற்றியமைத்தன புடம்போட்டன. யாழ்ப்பானம் மத்திய கல்லூரிக்கு அண்மையிலிருந்த நகர மண்டபத்தில் தென்னிந்திய அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் கேட்கக்கிடைத்தன. இவையெல்லம் இடதுசாரிய அரசியல் அறிவைத் தந்தது மட்டுமன்றி மக்களிந்-நலிந்தவர்களின் பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளவும் அதற்காக பணி செய்யவும் எம்மை உந்திவிட்டன என்பதை மிக முக்கியமாகக் கருதுகின்றேன்.

இரா:-இடதுசாரிய அரசியல்வாதிகள் குறித்த மிகக் கடுமையான விமர்சனங்கள் நிலவி வருகின்ற இன்றைய முதலாளியமயமான உலக மயமாக்க சமுதாயத்தில் உங்களை “ இடதுசாரி “ என அடையாளப் படுத்துவதில் தயக்கம் ஏற்படுத்துவதில்லையா?...
  

எஸ்.கே.ஆர்:-நிட்சயமாக தயங்குவதில்லை. ஏனெனில் இடது சாரியம் என்பது வெறும் அரசியல் பிழைப்புக்கான ஒரு சொல் அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை. இடதுசாரிகளும், இடதுசாரி அரசியல்வாதிகளும் சோரம் போகலாம். ஆனால் சித்தாந்தம் என்றும் வாழும். நீங்கள் குறிப்பிட்ட உலகமயமாக்க உலகத்தில் கூட ஒதுக்கப்பட்டவர்கள், நலிந்தவர்கள், புறமொதுக்கப் பட்டவர்கள் பெருவாரியாகவுள்ளனர். “ புட் சிற்றிகள் “ அதிகரிக்கின்ற அளவுக்கு மேலாக ஒருவேளை உணவுக்கு ஏங்கும் மக்களும் பல மடங்காக அதிகரிக்கின்றனர். இந்த நிலை இருக்கும் வரை இடது சாரிய சித்தாத்தத்தின் தேவை உள்ளது. நலிந்தவர்கள் பக்கத்தில் எளியார்க்கு எளியனாக நிற்பதற்கு ஏன் தயங்கவேண்டும் ?... இப்படி நிற்பதுதான் சமூக சேவைக்கான அடிப்படைத் தகுதியென நம்புகின்றேன். 

இரா:-சரி அப்படியானால் மத்திய கல்லூரி தந்த மாற்றத்தின் தொடர்ச்சியை உங்களின் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் தடை ஏற்படவில்லையா....? உத்தியோகம், குடும்பம், என்று வருகின்ற போது பலரும் கொள்கையோடு மல்லுக்கட்ட விரும்புவதில்லையே இதுபற்றி என்ன?...
  
எஸ்.கே.ஆர்:-நீங்கள் சொல்வது ஒரு பொதுவான கருத்துத்தான். உண்மையில் எனது பணிகள் மிளிர வாய்ப்பைத் தந்தது எனக்கு கிடைத்த உத்தியோகமும், குடும்பமும்தான். 1962ல் எனக்கு திருமணமானது, 1961ல் எனக்கு உத்தியோகம் கிடைத்தது. நான் லண்டன் A.L பரீட்சைக்காக தமிழ், சமஸ்கிருதம், நவீன கால வரலாறு ஆகிய பாடங்களைப் படித்து வந்தேன். நிர்ப்பந்ததினால் சம்பந்தம் இல்லாத பாடமாக சமஸ்கிருதத்தை படித்த காரணத்தினால் அந்தப் பரீட்சையில்  தோற்றுப்போனேன். அந்த நேரத்தில் மத்திய கல்லூரிக்கு அடிக்கடி M.S.S. வந்து போவார். M.S.சீனித்தம்பி தேவரையாளி இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த காலத்தில் தான் மத்திய கல்லூரியின் வேண்டுதலைச் செவிதாங்கி என்னை தேவைரையாளி இந்துக் கல்லூரியின் எழுதுவினைஞராக உள்வாங்கினார். திருமணமும் உத்தியோகமும் ஒரே காலத்தில் வாய்த்தது. இதுதான் ஊருக்கு அந்நியமாகிப் போன என்னை ஊருடன் பிணைத்த கதை. இதன் பின்னர் தான் முழுநேரமாக எனது ஊரில் சமூக சேவை சார்ந்த விடயங்களில் ஈடுபட முடிந்தது. ஜெயந்தி, சுகந்தி, மாலதி, பவந்தி ஆகிய நான்கு பெண் பிள்ளைகளுக்கும் ஜெயந்தன், சுகந்தன் ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் தந்தையானேன். குடும்பத்தை முழுதும் பிரதிபலித்தது என் மனைவி இந்திராணி.

   மாணவப் பருவத்தில் ஊரில் இல்லாமையால் நண்பர்கள் வாய்க்கவில்லை.சி.இராசேந்திரன், க.செந்தில்வேல் அப்பால் இருவரும்தான் ஊரில் என் நண்பர்கள். இவர்களுக்கு அப்பால் என்னோடு உறுதுணையாய் நின்றவர்கள் எல்லோர்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு. இளைஞர்கள் சமூக சேவையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். என்னை மதித்தவர்கள், என் அபிலாசைகளை விளங்கிக் கொண்டவர்கள், என்னைத் தொடர்ந்தவர்கள்... அவர்களால் தான் என்னை உணர்ந்து கொள்ள முடிந்தது. எனது சமூகப்பணி என்று ஏதாவது பேசப்பட்டால் அதில் அந்த இளைஞருக்கும் மிக முக்கிய பங்குண்டு. 


இரா:-அப்படியாயின் நீங்கள் உத்தியோகம் பெற்று திருமணமாகி ஊருக்கு வந்தபின்னர் உங்களதி கொள்கைகள், அனுபவங்கள் ஆளுமை என்பவற்றை உங்களூரின் இளைஞர்களிடத்து சுவறச்செய்ததை முக்கிய பணியாக கருதியிருந்தீர்களா?.... அப்படியாயின் ஏன்?....



எஸ்.கே.ஆர்:- உண்மையில் அந்த இளைஞர்களிடம் என் செல்வாககைச் செலுத்தவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கவில்லை.மாறாக என் எண்ணங்களை அவர்கள் ஆகர்ஷித்து அதற்கு செயல் வடிவம் கொடுக்க என்னோடு உறுதுணையாக நின்றார்கள். எந்த ஒருவனும் இளைஞர்களின் சுதந்திரமான சிந்தனைகளை மழுங்கடித்து விடக்கூடாது. தன்னுடைய இலாபத்துக்கு அவர்களின் உணர்வுகள் துடிப்புக்களைப் பலியிடக்கூடாது. இளைகளுக்கான நல்ல வழிகளை செப்பமிட்டுக் கொடுப்பதுதான் சரியான வழிகாட்டல். இன்னொரு வகையில் சொல்வதனால் அந்த இளைஞர்களுக்கு நான் வழிகாட்டியல்ல. வயதில் கூடிய ஒரு நண்பன் அவ்வளவுதான். இன்றுவரை என் மனதிலுள்ள மிகப்பெரிய திருப்தி என்னவென்றால் அந்த இளைஞர்கள் இன்று முக்கியமான ஆளுமைகளாக விளங்குகின்றனர் என்பதுதான். அமரர் ராஜ.ஸ்ரீகாந்தன், அமரர் வ.இராஜேஸ்வரன், அமரர் கோவி.நேசன் போன்றவர்களுடன் தி.வரதராசன், சி.குமாரராஜன் போன்றவர்கள் அன்று இளைஞர்களாக இருந்து என்னுடன் நின்றவர்களில் முதன்மையானவர்கள். இவர்கள் மாத்திரமல்ல இன்னும் பலர். பெயர் குறிப்பிட்டால் பெரியதொரு பட்டியல் நீளும்.
             எங்களுக்கு முந்திய பெரியவர்கள் எங்களுக்கு சுவறச் செய்தவற்றைப் போலவே எங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த அன்றைய இளைஞர்களுக்கும் எதையாவது பயனுள்ள வகையில் சுவறச் செய்ய முடிந்தது என்ற திருப்ப்தி இப்போது ஏற்படுகின்றது. இன்றைத்ய இளைஞர்கள் இதனைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் தங்களை வழிப்படுத்துபவர்களின் குறைகளை அரட்டையடிப்பவர்களாக இல்லாமல் நிறைகளைத் தொடர்பவர்களாக மாற்றம் பெறவேண்டும். யார்தான் இந்த உலகில் குறையற்றவர்கள். நிறைவானதைப் பார்ப்பவர்கள் தான் சாதிக்கின்றார்கள் - சாதனைகளைத் தொடர்கிறார்கள். 
                  அன்று என்னைத் தொடர்ந்த இளைஞர்களின் சாதனைகள்தான் எனது சேவைகளாகப் பேசப்படுகின்றன என்பதுதான் உண்மை. விளையாட்டில், இலக்கியத்தில், சமுதாயப் பணிகளில், செயற்றிட்டங்களில் அந்த இளைஞர்கள் செய்த உன்னத சாதனைகள் தான் இன்று எனக்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்து என்னைப் பற்றிப் பேசவைத்தன.
  
இரா:-உங்களுக்கு முந்திய பெரியவர்கள் என்று குற்றிப்பிட்டிருந்தவர்கள் உங்களிடம் சுவறச் செய்தவை பற்றி சற்று விரிவாக கூற முடியுமா ?.... அது இன்றைய இளைஞர்களுக்குப் பயனுடையதாகலாம் அல்லவா ? 


எஸ்.கே.ஆர்:- நிட்சயம் பயனுடையதாகும். எங்களுக்கு முந்தய பெரியவர்கள் வெளிப்படையாக வேறுபாடு புலப்படாத இரு வேறுபட்ட கொள்கையாளர்களாகவிருந்தனர். ஒரு சாரார் பண்பாடு, மதம், எமக்கான கலாச்சாரக் கூறுகளை காந்தீய மரபின் தொடர்ச்சியோடு செழுமை குன்றாத வகையில் பேணிவழர்க்க விரும்பியவர்கள். எந்தப் புரட்சிகள் நிகழ்ந்தலும் அவை செழுமையை குறைத்து விடக்கூடாது என்று கருதினர். அதே நேரத்தில் தமிழ் நாட்டில் முகிழ்த்த திராவிட இயக்கங்களின் கொள்கைகளின் வசப்பட்டு பகுத்தறிவு வாதத்தின் பிடியினுள் சிக்கி சமுதாய சீர்திருத்தங்கள் புரட்சிகரமானவையாக அமைந்து அடிப்படை மாற்றங்களைத் தரவேண்டும் என விரும்பினவர்கள் இன்னொரு சாரார். க.சூரன், மூ.சின்னத்தம்பி... போன்றவர்களைத் தொடர்ந்து வந்த அ.ம.செல்வத்துரை, சைவப்புலவர் சி.வல்லிபுரம், திரு.V.A.கோவிந்தசாமி,அ மூ.சி.சீனித்தம்பி போன்ற தலைவர்களிடம் இத்தகைய வேறுபாடுகளைக் காணலாம். வேறுபடுகளுக்கு அப்பால் இத்தகையவர்களின் சிந்தனைகளால் வடிவமைக்கப் பட்டவர்களே நாங்கள். வதிரிக் கிராமத்தின் உருவாக்கம் இத்தகையவர்களின் ஒட்டு மொத்தமான சிந்தனா ஊற்றுகளிலிருந்துதான் பிரவாகித்தன.












இன்னும் வரும்..............

  உங்கள் ஆக்கங்களை எங்கள் மின் அஞ்சல் 

vathiry.manram@hotmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ ,அல்லது மன்றம் முகநூல் பிரதியின்  Messages  க்கோ அனுப்பிவையுங்கள்.