S.K.R க்கு அஞ்சலிகள்

எம் மண்ணின் காவிய நாயகனிற்கு எனது நெஞ்சம் கனத்த இதய அஞ்சலிகள@பத்மஸ்ரீ வரதராசன்
👁‍🗨”அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” 🔳ஈதல் என்பது பிறருக்குக் கொடுப்பது. இசைபட வாழ்தல் என்பது அப்படிக் கொடுப்பதால் வரும் புகழோடு வாழ்வது. கொடுப்பது என்பது பணத்தையோ பொருளையோ கொடுப்பது மட்டுமல்ல. உழைப்பினைக் கொடுப்பது, பொன்னான நேரங்களை சமூகத்திற்காக கொடுப்பது, நல்ல வார்த்தைகளைக் கொடுப்பது. இவ்வாறான சமூக எண்ணங்களோடு எம் மத்தியில் வாழ்ந்து பிறரையும் சமூக எண்ணங்களோடு மிளிர செய்த அதியுயர் பொக்கிஷம் அமரர் சி.க.இராசேந்திரன். அதுமட்டுமல்லாமல் அரச பணியில் சிறந்து விளங்கியதன் பயனாக அவரின் தொழில் முறையான பெயரோடு (கிளாக்கர்) அனைவராலும் அறியப்பட்டவர். 🔳 அமரர் சமூக மேம்பாட்டுக்காக பல உயர் சேவைகளை ஆற்றியவர். சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடிய மாமனிதன். ஒட்டுமொத்த சமூகமும் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கம். எம் கிராம மக்கள் அனைவரினதும் உயர்வுக்காக சிந்தித்ததால்தான் அவர் நீண்டகாலம் எம் சமூக மட்ட அமைப்புகளின் அதியுயர் பதவிகளை அலங்கரிக்க முடிந்தது (கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேல்). 🔳இன்று நாகரிக சமுதாயத்தில் சமூக சேவை பற்றிய கருத்துகள் பல பேசப்படுகின்றன. சமூக சேவையின் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுகிறது. கிராமங்களில் தாய்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்கின்றன. இவ்வாறான நிலமைகள் தோற்றம் பெறுவதற்கு எமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் பாடுபட்டிருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அத்தகைய முன்னோர்களில் முதன்மையானவர் அமரர் கிளாக் ஜயா. 🔳வதிரி தமிழ் மன்றம், கிளாக் ஜயா எனும் இரண்டு விடயப்பரப்பினை ஆராய்ந்தால் “இரண்டினையும் பிரித்து பார்க்க முடியாது” என்பதே ஆய்வின் முடிவாக அமையும். எண்ணற்ற சேவைகள், நிகரில்லா தலைமைத்துவம், அடுத்தவரை வாழ்த்தி உயர்த்தும் பண்பு, விசேடத்துவம் கொண்ட செயல்வீரம் , மக்கள் மனங்களில் வேரூன்றி அமரும் வித்தை இவை ஜயாவின் தனித்துவமான அடையாளங்கள். 🔳நீண்டகாலமாக வதிரி தமிழ்மன்றத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் அன்னார் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. குறிப்பாக ஜம்பது ஆண்டுகளிற்கு முன்னர் எம் சமுதாய பரப்பிற்குள் பாலர் பாடசாலை என்பது எட்டாக்கனியான விடயமாக இருந்து வந்தது. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட அன்னார் 1972 ஆம் ஆண்டளவில் வதிரி தமிழ் மன்ற பாலர் பாடசாலை எனும் மாபெரும் விடயத்தினை உருவாக்குவதற்காக முன்னின்று பாடுப்பட்டவர். இன்று இந்த பாலர் பாடசாலை ஜம்பது ஆண்டுகளை தாண்டி சிறப்பாக இயங்குவதற்கு அன்னாரின் சிந்தனைகளே காரணங்களாக விளங்குகின்றது. 🔳இதேபோல தன்னுடைய அரச கருமங்கள் முடிவடைந்ததன் பின்னர் தினமும் எமது நூலகத்தில் அதிகளவான நேரங்களை செலவிட்டு இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம், எழுத்தாற்றல் போன்றன வளர்ச்சிபெற உந்துசக்தியாக விளங்கியவர். எம் கிராமத்தில் பல்வேறு ஆளுமைகளை கொண்டவர்களின் திறமைகளை வெளிப்படுத்த இவர் அமைத்து கொடுத்த மேடைகள் எண்ணிலடங்காதவை. இவ்வாறான விடயங்களில் பயன்பெற்றவனாக என்னையும் நான் உணர்ந்து கொள்கிறேன். 🔳தேசிய ரீதியில் புகழ்பெற்ற எமது கழகத்தின் வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்டவர் கிளாக் ஜயா, இவருடைய காலங்களில் பல்வேறு கிண்ணங்களை எமது அணி சுவீகரித்திருந்தது. அத்தோடு கட்டுப்பாடுகளுடன் கூடிய நன்னடத்தை அணியாகவும் எமது அணி விளங்கியது. தலைமை எனும் அரியாசனத்தில் தனக்குரிய பணியை சீராக வழங்கியதன் பலன் எமது அணி மாகாண ரீதியிலான கிண்ணத்தினை பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி பெற்றுக்கொள்ளவும் வழிசமைத்தது. அடுத்தவரை வாழ்த்தி உயர்த்தும் பண்பு, ஏனைய பிள்ளைகளையும் தன் பிள்ளை போல் நினைத்து அக்கறை கொள்ளும் தன்மை பிறரிடமிருந்து அன்னாரை இலகுவில் பிரித்து காட்டும். தனக்கு பின் தன்னுடைய களப்பணிகளை மேற்கொண்டு செல்ல அவர் வளர்த்து விட்டவர்கள் இன்று தேசியம் வரை நிர்வாக பணிகளில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள். 🔳கிளாக் ஜயா- வரதன் எனும் இணை மன்றத்தில் நீண்டகால அதியுயர் பொறுப்புகளை பல்வேறு சவால்களின் மத்தியில் வெற்றிகரமாக ஆற்றியது. எனது தந்தையினுடைய உயர்வுகளை கண்டு அவர் கொள்ளும் புலகாங்கிதம் அளப்பரியது. நடக்க முடியாத காலத்திலும் என்னுடைய தந்தையின் மணிவிழாவில் கலந்து கொண்டு ஆசி வழங்கியது உணர்வுபூர்வமானது. என்றும் நன்றிக்குரியவர்களாக அவருக்கு நாம் இருக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். 🔳ஓர் மனிதனின் பிறப்பு சம்பவம், ஆனால் இறப்போ சரித்திரமாக அமைய வேண்டும் . இந்த கூற்றிற்குரிய உதாரண புருசன் எங்கள் கிளாக் ஜயா, இவர் எங்களின் சொத்து -வைரத்தின் வைரம் - சரித்திர நாயகன். 🔳நிறைவான சேவைகளூடாக ஆத்மார்த்தமான அன்பை அனைவரிடமும் விதைத்து இன்று(01/10/2022) இவ்வுலகை விட்டு அவர் பிரிந்தாலும், அவரின் செயல் வடிவமாக அவரின் விழுதுகள் என்றும் அவரின் புகழை தழைத்தோங்க செய்வார்கள். அத்தோடு ஆற்றிய மேன்மைமிகு பணிகள் என்றும் அவரை மனதில் நிலைநிறுத்தி கொள்ளும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. 👉🏿சென்று வாருங்கள் ஜயா! உங்களின் பணிகள் என்றும் அழியாது , எம் மனங்களில் என்றும் வதிரியின் காவிய நாயகனாக வாழ்வீர்கள். 🙏 வரதன் பத்மஸ்ரீ 🙏 🙏
தோன்றின் புகழோடு தோன்றுக.....
தன்நலம் பாராமல் பிறர் நலத்துக்கா வாழ்ந்த மாமனிதர் இவரைப் போல் ஒருவரை இனி நம்மண் காணாது. ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது. இறுதி நேரத்தில் உங்களுடன் நான் ..... என் கண்கலங்க வழி அனுப்பி வைக்கிறேன் @ மூத்த மருமகன் -லோகேந்திரா(பேபி ஆர்ட்ஸ்)
சரிந்தது எங்கள் இலட்சிய இமயம்,.... புகழ் பூத்த பாரம்பரிய இடதுசாரிய செயற்பாட்டாளர் வதிரி இராசேந்திரம் (கிளாக்கையா) அவர்களுக்கு செவ்வணக்கம்🙏🏿 @சிவச்செல்வன்
=>சொல் அல்ல செயல்!!! @ லோ.விஜேன்
எனதருமை அப்பையா ( சி.க. இராஜேந்திரன்) அவருக்கு என்னுடைய கண்ணீரோடு ஆழ்ந்த அஞ்சலிகள் இனி என்னை யார் கேட்பார்…. வேலைக்கு போகவில்லையா என்று.. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு மந்திரச்சொல் இருக்கிறது. அடிபட்டவர்களுக்கு ஆறுதல் உரம் ஊட்டுவது தான் இந்த மந்திரச்சொல். ஸ்டீபன் ஷாகின்ஸ் சொன்னது போல எதை இழந்தீர்கள் என்பதல்ல எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை வழியும் எப்போதோ முடிந்த காரியம்! இதை மனதில் இருத்திக்கொண்டால் எந்தவித கர்வமும் எழாது. செய்யும் காரியத்தில் விருப்பு வெறுப்பு இருக்காது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அந்தக் காரியம் மிகச் சிறப்பாக செயல்படும். கர்வமற்ற சீரான செயல்கள் உடைய வாழ்க்கை உன்னதமாக இருக்கும். அதுவே வாழ்க்கை. மற்றதெல்லாம் குழப்பங்கள். அவர் சகவாழ்வை கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து எம் ஊரவர்களின் மத்தியில் நல்லுறவை வளர்ப்பது நாம் அவருக்கு செய்யும் கைமாராக அமையும். “மனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும்”. ஏனவே நாம் அவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்க முன்வர வேண்டும் என்பதுடன் உங்கள் வாழ்க்கையின் இந்த கடினமான நேரத்தில், இந்த சோதனையை உங்கள் எங்கள் குடும்பத்தினர் கடக்க தேவையான பலத்தை தருமாறு நான் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன். சென்று வாருங்கள் இந்த வரிசையில் நாமும்!!! ஒம் சாந்தி சாந்தி சாந்தி!!!… @ லோ.விஜேந்திரா
என் அஞ்சலிகள் @ மேமன் கவி-கொழும்பு கிளாக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சி.கா.,இராஜேந்திரன் அவர்கள் தனது 84 வயதில் நேற்று இரவு (1.10.2022) வதிரியில் காலமானார். அவரை நான் 70கள் தொடக்கம் அறிவேன்.. தெணியான் சேரால்தான் அவருக்கு என்னைப் போன்றவர்கள் பரிச்சமானோம்.70களில் நண்பர் பூபதியுடன் யாழ் சென்றபொழுது எங்களை வரவேற்க யாழ் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தது இன்னும் நினைவில் நிற்கிறது. தொடர்ச்சியாக ராஜஸ்ரீகாந்தன், வதிரி ரவீந்திரன், ரவிவர்மா, குமாரராஜன் போன்றவர்கள் வழியாக அவருடன் தொடர்வு இருந்து வந்தது. யாழ் வதிரி செல்லும் பொழுதெலாம் அவரைச் சந்திக்க தவறுவதில்லை, இதில் அவரைப் போய் நான் பார்ப்பதுதான் முறை. ஆனால் நான் வதிரிக்கு வந்து இருக்கிறேன் என்ற அவருக்குத் தகவல் கிடைத்தும் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அவரே என்னைத் தேடி வந்து விடுவார், அவ்வளவு எளிமையான மனிதர், முற்போக்கு இயக்கம், இடது சாரி இயக்கம், ஈழத்து இலக்கிய உலகம் எல்லாவற்றையும் பற்றி அறிந்து வைத்திருந்தார். அவற்றின் களச் செயற்பாட்டாளராக ஆர்ப்பாட்டம்யின்றி, செயற்பட்டவர்.அவரிடம் கற்றுக் கொள்ள நிறைவே இருந்த்து தன் சமூக சுற்றுபுற சமூக இயக்கங்களின் செயற்பாடுகளில் தன்னைப் பின்னிப் பிணைத்துச் செயற்பட்டவர் அதனால்தான் வதிரி தமிழ் மன்றம் தன் செயற்பாடுகளுக்கான மலரை அவரை முன் நிறுத்தியே வெளியிட்டது. அத்தகைய ஒரு பொறுமதிக்க மனிதர். அவரைப் போன்ற மனிதர்களின் உடல்கள் மரணத்தால் மௌனித்து விடலாம் சமூக இயக்க வெளிகளில் அவரது செயற்பாடுகள், நினைவுகள் அழியாத ஆவணங்களாக இருக்கும், பொறுமதிக்க நண்பர் எம்மை விட்டுப் போய்விட்டார். அவருக்கு என் இதயபூர்மான அஞ்சலி. @ மேமன் கவி -கொழும்பு.
மாமா சி.க.இ பற்றி தற்போதைய இளைஞர்கள் அறிந்திராத சில தகவல்கள்.@ மு.பாக்கியநாதன்
தமிழ் மன்ற ஆரம்ப முன்னாடியாக மறைந்த வெ.ஆ.கோவிந்தசாமி வைத்தித்தியர் அவர்களோடு சேர்ந்து அமரர் ஒஸ்தார் போன்ற தமிழ்நாடு ஈ.வே.ரா பெரியாரின் வழிந்த அவரின் திராவிடக் கொள்கையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் கடவுள் மறுப்பாளர்களுமாவார் அப்போது இக்கொள்கைகளினால் கவரப்பட்ட மாணாக்கரான மாமா சி.க.இ அவர்களும் அவ்வழியைப் பின்பற்றினார் மாமா ஆரம்ப காலங்களில் கோயிலுக்கச் செல்லுவதில்லை. அப்போது பாரிய எதிர்ப்பின் மத்தியில் வானொலி அரங்சாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும் அப்போது வடமராட்சி அயல் கிராமங்கள் எங்கும் வானொலி கிடையாது. எமது ஊரே திரண்டு வந்து மன்றத்துக்கு வெளியில் இருந்து பாட்டுக் கேட்பர். மாமா அவர்கள் யாழ் மத்திய கல்லூரியில் எச்.எஸ்.சி ஆங்கில மூலம் படித்துவந்தார். அப்போது தவணை லீவில் வீடு வரும்போது வைரகோவில் வீதியில் சமூக நாடகங்களை தானே எழுதி எமது இளைஞர்களுக்குப் பழக்கிக் கொடுத்து பல நாடகங்களை அரங்கேற்றினார். இது அவரதும் எமது ஊருக்கும் கன்னி முயற்சியாகும். நாடாக அரங்கு செய்ய பனங்குத்தி பல கட்டில்களை அடுக்கி பெண்கள் அணியும் சேலைகளைச் சீன்களாகக் கட்டி அதிலேயே நாடகம் நடக்கும் தானும் நடிப்பார். இவர்காலத்திற்கு முன்பு புராண நாடகங்களே எமதூரில் நடைபெற்று வந்தன. இது அவரது முதல் சாதனை. எமது கிராமத்திலேயே முதன் முதலில் நேசறி எனப்படும் மொன்டிசோரி பாலர்வகுப்பு அமரர் நைல்ஸ் அவர்களின் ஆலோசனை வழிநடத்தலிலும். சி.க.இ அவர்களால் தமிழ் மன்ற ஆதரவில் நடைபெறத் தொடங்கியது. அதில் முதலில் படித்த பலர் படித்துப் பட்டம் பெற்று இன்று நல்ல உத்தியோகங்களிலும் உள்ளார்கள். பலர் திருமணம் முடித்து அவர்களின் பிள்ளைகளுமே திருமணம் முடித்து விட்டார்கள். மாமா அதில் இரண்டு தலைமுறை கண்டு மூன்றாம் தலைமுறையும் தற்போது படிக்கிறார்கள். இது ஒரு இமாலய சாதனை. இதனைப்பறைசாற்ற பலரது வீடுகளில் முதல் குழுவில்(batch) இல் படித்தவர்கள் எடுத்த குறும்படம் குகன் ஸ்ரூடியோவினால் எடுக்கப்பட்ட படம் சான்று பகர்கின்றன. ஒவ்வொரு போயா விடுமுறை நாட்களில் கவியரங்கம், தாளலய நாடகம். வினாடி வினா போட்டிகள் போன்ற இன்னின்னோரன்ன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. எமது கிராமத்தில் முதன்முதலில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முன்னாள் அதிபர் அமரர் அ.விஜயநாதன் அவர்களும் ம.பாக்கியநாதன் இருவரும் 1972ஆண் ஆண்டு மண்டபத்தில் ஒரு விருந்துபசாரம் நடாத்தி ஏனையோரை ஊக்கப்படுத்தியதால் இன்று பல பட்டதாரிகளை எமதூர் கண்டது அவர் கண்ட கனவு. இவைகள் இற்றைக்கு 20, 30 வருடங்களுக்கு முன்பு அவர் கண்ட கனவால் எத்தனை பட்டதாரிகள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகங்கள், இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். விளையாட்டு அன்று எப்படி நடந்ததோ அதனை விட வேகம் கொண்டு நடைபெறுகின்றது. ஓம் சாந்தி @ முருகேசு பாக்கியநாதன் - கனடா.
வதிரியின் தலைமகன் @ வ்.யோகேந்திரா
வதிரியின் தலைமகன் கிளாக்கர் ஐயா அவர்கள் என்றும் எம்மை வழிநடத்தும் ஓர் எளிமையின் வடிவமான பேராளுமை. தன்னலமற்ற சமூக சேவைகளை வழங்குபவர்கள் நோய் நொடிகள் இன்றி நீண்ட காலம் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பார்கள் என்று பல விஞ்ஞான ஆய்வுகள் இன்று அடித்துக் கூறுகின்றன. இதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மீகம் கூட கூறியிருந்தது. இந்தக் கூற்றுக்களை நிரூபிப்பது போலவே கிளாக்கர் ஐயாவின் பொதுவாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் அமைந்துள்ளன. வசதி வாய்ப்புகள் வரும் பொழுதோ அல்லது ஓய்வு நிலைக்கு வந்த பின்னரோ தான் பலரும் சமூக சேவையை பற்றிய சிந்திக்கின்ற காலத்தில் ஒரு இளம் குடும்பஸ்தனாக குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே சமூக சேவையையும் இன்னொரு கையில் மகிழ்வோடு ஏந்தி கொண்டவர். எனக்குத் தெரிந்தவரையில் அவர் தனது குடும்பத்திற்கு செலவழித்த நேரங்களை விட நமது ஊருக்காக செலவழித்த நேரங்களே அதிகம் என்று நினைக்கின்றேன். நேரத்தை கொடுப்பது என்பது தன் ஆயுளின் ஒரு பகுதியை கொடுப்பதற்கு சமமானது. அதனால் தானோ இயற்கையோ அல்லது இறைவனோ அவருக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்வையும் வழங்கியிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.S .K. R /சி. க .ரா என்ற மூன்றெழுத்துக்கள் வதிரி என்ற மூன்றெழுத்துக்கள் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். அத்துடன் அவரது சமூக சேவைகளும் சமூகப் பற்றும் அவரிடமிருந்து நமது இளைய தலைமுறைகள் இடமும் விதைக்கப்பட்டே உள்ளன. அவரின் காலத்தில் அவரோடு பழக கிடைத்ததே என் போன்ற பலருக்கு கிடைத்த பாக்கியம். அவரின் கனவுகள் லட்சியங்களுக்காக துணை நிற்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான இறுதி அஞ்சலிகளாக அமையும். செய்வோம். @ வ்ல்லிபுரம் யோகேந்திரா -லண்டன்.
கடமை முடிந்தது @ கனகசபாபதி செல்வநேசன்
கடமை முடித்து சிறகை ஒடித்தது சமூகப் பறவை. வட்டுவத்தையில் விதைகள் விதைத்து தட்டிக் கொடுத்து பசுமைகள் வளர்த்த சிவப்புப் பறவை. எலும்பும் தோலும் உங்கள் கவர்ச்சி எழுதுநர் பதவியில் என்றும் உயர்ச்சி கண்ணாடி வழியே உள்ளங்கள் கவரும் காவியப் பறவை. கூடுதனை விட்டு காலமாய்க் கரைந்தாலும் கிளாக்கர் ஐயா என்றும் எங்கள் கிளரெஞ்சப் பறவை. _/_/_/ @கனகசபாபதி செல்வநேசன்
முகவரி தந்த முதல்வன் ! @ வதிரி.சி.ரவீந்திரன்
அரசியல் சாயம் மாற்றி விரும்பிய நிறத்துள் வாசம் புரியும் காலத்தில் தன்மனக் கொள்கையுள் தளராது வாழ்ந்து காட்டி சிவப்பு நிறத்தை சிரமேற்று வாழ்ந்தவன். வதிரிக் கிராமத்து வரலாற்று நாயகனாய் வாழ்நாளில் நின்று வதிரி தமிழ் மன்றத்தை உலகே அறிய வைத்த உத்தமனே உனை நானும் எண்ணிப் பார்க்கின்றேன். செயலாளனாய் சிறப்பான சேவையாலே முன்னேற்றப் பாதைக்கு முன்னே வர வைத்தோனே உன்தன் திறமையால் எங்களூர் எல்லாப் புகழும் ஏற்றம் கொண்டு சிறந்ததே! வதிரியோடு என்னையும் வளமாக்கி தன்னூரின் பெயர் பொறித்து கலையும் இலக்கியமும் உதைபந்தாட்டமும் கைகூடி உலாவிட என்னை வளர்த்து எழிலாய் அரங்கேற வைத்தவனே ! என்தன் கிளாக்கர் மாமா எனக்கு முகவரி தந்த முதல்வனே எங்கு இனி உன் குரல் கேட்போம்? ஆழ்ந்த துயரோடு அஞ்சலி செலுத்துகின்றேன்! @ வதிரி சி.ரவீந்திரன் - கொழும்பு
எமது பிரதேசத்தில் பல கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், கவிஞர்கள், நிர்வாகிகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பல் திறன்கொண்டோர் தேசியம்,சர்வதேசம் எனக்கால் பதிப்பதற்கு வித்திட்ட /களம் அமைத்த,தூண்டுதலாக அமைந்த பெருந்தகை. சென்றுவாருங்கள் அப்பையா @ சந்திரஹாசன்
The Third Communist Stàr. Actually we have lost the third Communist star from our Thevaraiyali community. The first one was Mr.Sathananthan. The next one Mr.Theniyan and the last one Mr. S.K.Rajendran,fondly and popularly called by us Clerkaiya. All the three dedicated their life totally to the upliftment of the Thevaraiyali community. I still gratefully remember that, around 1990, when my father and I visited Negombo, he wholeheartedly welcomed us and accommodated us in a separate room, adjoining his residence. We stayed there for more than eight months. His eldest daughter Jeyanthy and her husband Mr.Logendra took special care of us all these eight months by providing us with food and lodging. More can be written about him. Rest in peace his rare soul. @ Rednasabapathy Uthayashankar
வதிரியை வளமாகிய எங்கடை மாமா @ ஏகாம்பரம் ரவிவர்மா
வதிரியை வளர்த்த சிற்பிகளில் ஒருவர். வதிரி,வடமராட்சி, யாழ்ப்பாணம் ஆகியவற்ருக்கு வெளியேயும் தனது ஆளுமையை நிலை நாட்டியவர். பாடசாலையில் படிக்கும்போது எங்களுக்கு கிளாக்கையா, ஆசிரியர்களுக்கு கிளாக்கர். வளரும் போது அவரது பெயர் சி.க.இராசேந்திரன், அவர் எமக்கு மாமா என்ற விபரம்தெரியவந்தது. தேவரையாளி இந்துக் கல்லூரியையும், வதிரியையும் புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்ர இருவரில் ஒருவர் மாமா. இன்னொருவர் அதிபர் எம்.எச்.சீனித்தம்பி. அவர்கள் ஒரு சிலவற்றை எமக்குச் சொன்னார்கள். அதனை நாம் நிறைவேற்றினோம். அவற்றால் ஏற்பட்ட பலாபலன்கள் அப்போது எமக்குத் தெரியவில்லை.அவற்றின் பரிணாமவளர்ச்சி இன்றும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாகி,சிறந்த தலைவர் என்று மாமாவை உதாரணம் காட்டுவார்கள். சிறந்த தலைலவராகவும் நிர்வாகியாகவும் இருந்ததற்கு அப்பால் சிறந்த நிர்வாகிகளையும் , தலைவர்களையும் அடையாளம் கண்டு உருவாக்கிய சிற்பி மாமா மாமாவுடைய ஆளுமைகள் எவை எனப்பட்டியலிட முன்னர் அவருக்கு என்ன தெரியாதெனத் தேடினால் அந்தப் பட்டியல் வெறுமையாக இருக்கும். தாய்,தகப்பன், சகோதர,சகோதரிகளை விட வலிமையானது மாமா எனும் உறவு.மாமாவின் சொல்லுக்கு மறு பேச்சு சொல்ல யாருமே இல்லை.யார் அழுத கண்னீர் இது எனக் கேட்டால் இது வதிரியா மட்டும் அழுத கண்ணீர் அல்ல, அவை நேசித்த அனைவரும் அழுத கண்ணீர்.