நவயுக வதிரியின் சிற்பி எஸ்.கே.ஆர்

நவயுக வதிரியின் சிற்பி,மன்ற ஊற்று,சமூக நாயகன் அமரர் SKR அவர்களின் இறுதியாத்திரை
வதிரி தமிழ் மன்றத்தின் முன்னைநாள் நீண்டகாலத் தலைமை நிர்வாகியும் பருத்தித்துறை உதைபந்தாட்டச் சங்கத்தின் முன்னைநாள் பொதுச்செயலாளரும் வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலயத்தின் முன்னைநாள் பொதுச்செயலாளரும் ஓய்வு பெற்ற லிகிதரும் வாழ்நாள் இடதுசாரியும் பிரபல சமூக சேவகனுமான "சமூக நாயகன்" அமரர் சி. க. இராஜேந்திரன் அவர்களது இறுதிநாள் நிகழ்வுகள் உரிய மரியாதைகளுடன் சிறப்பாக இடம்பெற்றன. கடந்த 01.10.2022 அன்று இயற்கை எய்திய அமரர் SKR அவர்களின் இறுதிநாள் நிகழ்வுகள் 03.10.2022 அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது உறவுகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வானது அமரரது சாதனைகளுக்கு ஓர் சான்றாக அவரால் நிர்வாகத்துறையில் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று சர்வதேசம் வரையில் கால்பதிக்கும் மற்றுமோர் தலைவன் திரு. தி. வரதராஜன் (வதிரி தமிழ் மன்றத்தின் முன்னைநாள் நீண்டகால தலைமை நிர்வாகி. இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர்) தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அமரரின் பல்வேறு துறைகள் சார்ந்த சிறப்புக்களும் அவரால் சு ட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு.கொற்றை. P. கிருஷ்ணானந்தன்(ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்-கலை இலக்கியத் துறை சார்பில்) திரு.T.குலசிங்கம் தோழர் ( சிறுபான்மை தமிழர் மகாசபைத் தலைவர்-சமூக விடுதலைப் போராட்டம் தொடர்பில்) திரு. க. சின்னராசா(ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்-கலை இலக்கியப் பிரிவினர் சார்பில்) திரு.பா.முகுந்தன்(வடமராட்சி உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர்)திரு.இ.குகதாசன் (பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்)திரு.ம.அநாதரட்சன் (உதவிக்கல்விப் பணிப்பாளர்-இடதுசாரிகள் சார்பில்) அமரரின் அரசபணி தொடர்பாக திரு.ம. குட்டித்தம்பி (யா/தேவரையாளி இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர்) திரு.விந்தன் தோழர் (சர்வதேச தொடர்பாளர் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி-இடர்களின் பொழுது இடதுசாரியாக அமரரின் பங்களிப்பு தொடர்பாக) திரு.ந .ஆதவன் (அமரரின் மிகநெருங்கிய நண்பரான பிரபல ஏழுத்தாளர் அமரர் தெணியான் ஆசிரியர் அவர்களது மகன்)போன்ற பலரும் அமரரின் பெருமைகளை பேசி அஞ்சலி உரை நிகழ்த்தினார்கள் . மேலும் அமரரின் பாசறையில் வளர்ந்த அமரர் வ.இராஜேஸ்வரன் அவர்களின் மகன் திரு.இ.ராஜேஸ்கண்ணன் (யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ர விரிவுரையாளர்) அவர்களின் உணர்வுபூர்வமான இரங்கல் செய்தி திரு .பி .பிறேமதாசனால் வாசிக்கப்பட்டதுடன் திரு கனகசபாபதி செல்வநேசன் அவர்களின உருக்கமான கவிதையும் வழிநெடுகிலும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் அமரரை விளிக்கும் வகையில் சமூக விடுதலைப்போராளி,சிவப்பு மனிதன்,சிவப்புப்பறவை,தன்னலமற்ற தலைவன்,காவியநாயகன் என பல சிறப்புக்கள் வழங்கி பலராலும் உரையாற்றப்பட்டதுடன் இறுதியாக தலைவர் திரு.தி .வரதராஜன் அவர்களால் வதிரிக்கென புது ஒழுங்குகளை வகுத்து புது வடிவம் கொடுத்தவர் என்றவகையில் "நவயுக வதிரியின் சிற்பி" என பெயர் சூட்டப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக அமரரின் பூதவுடல் சீருடை அணிந்த டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்னைநாள் உதைபந்தாட்ட வீரர்களால் அவரது சேவைக்கால உறைவிடமாகிய வதிரி தமிழ் மன்றத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துசசெல்லப்பட்டது. வதிரி தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அஞ்சலிக் கூட்டமானது அமரரால் வளர்க்கப்பட்ட மற்றுமோர் ஆளுமையான திரு.சி.பத்மராஜன்(வதிரி தமிழ் மன்றத்தின் முன்னைநாள் தலைவர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது வதிரி தமிழ் மன்றத்தின் தலைவர் திரு.பா. தர்மித்திரனால் அமரரின் பூதவுடலுக்கு கழகக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் திரு .அ.அருளானந்தசோதி (தபாலதிபர் பருத்தித்துறை)அவர்களும் யா/ தேவரையாளி இந்துவின் சார்பில் திரு.க. தர்மதேவன் ஆசிரியர் அவர்களும் அரசியல் அமைப்புக்கள் சார்பில் திரு விந்தன் தோழர் (சர்வதேச தொடர்பாளர் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி)அவர்களும் அமரரின் சாதனைகளை துறைசார்ந்த ரீதியில் புகழ்ந்து உரைநிகழ்த்தினார்கள். இங்கு இடம்பெற்ற இந்நிகழ்வின் பொழுது வதிரி தமிழ் மன்றத்தினால் அமரருக்கு "மன்ற ஊற்று" "சமூக நாயகன்" போன்ற சிறப்புப்பெயர்கள் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இறுதியாக வதிரி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தின் கிழக்குப் பகுதியில் சமூகநாயகனின் நினைவாக அமரரது பிள்ளைகளால் மரங்கள் நாட்டும் வைபவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இதனைத் தொடர்ந்து அமரரின் பூதவுடல் உற்றார் உறவினர் அபிமானிகள் ஆர்வலர்கள் புடைசூழ ஆலங்கட்டை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய முறையில் தகனக்கிரியைகள் நிறைவேற்றப்பட்டன. "நன்றே செய் அதனை இன்றே செய்" என்ற வதிரி தமிழ் மன்றத்தின் மகுட வாசகத்தை இறுதிவரை தனது மூச்சாக கருதி அக்கணமே செயலாற்றிய செயல் வீரனே அமரர் SKR ஆவார். இவ்வாறாக வதிரி தமிழ் மன்றத்தினைக் களமாகக் கொண்டு பல கலைஞர்கள், பல விளையாட்டு வீரர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், கல்வியியலாளர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், நிர்வாகிகள், அரசியல்வாதிகள்,சிறந்த பல வாசகர்கள்) எனப் பல ஆளுமையாளர்களை உருவாக்கிய "தன்னலமற்ற தலைவன் " மறைந்தாலும் தனது நீண்ட கால சமூகப்பணிகளூடாக மக்கள் மனங்களில் " சமூக நாயகனாக " என்றும் எம்மண்ணின் "மூத்த பெருந்தலைவன்" வாழ்வார் என்று எண்ணி ஆறுதலடைவோமாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி